அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
நாட்டின் அரசியலமைப்பானது மக்களையும் எதிர்க்கட்சியினரையும் மிதிப்பதாக இருக்குமானால் அதன் விளைவுகள் என்ன என்பதை உலகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். அதாவது தற்போதைய நிலைமையில் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது.
தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்திருக்குமானால் சில வருடங்களில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஒரு காலத்தில் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஆனால் 18 ஆவது திருத்தத்தின் மூலம் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது. ஒருவரே தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதன் மூலம் பல சிக்கல்கள் எழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக தேசிய கூட்டணியினர் என்ற வகையில் இன்றைய தினத்தை கவலைமிக்க தினமாகவே பார்க்கின்றோம். மக்களின் இறைமை மற்றும் ஜனநாயகம் என்பன இறந்துபோன தினமாகும். அரசியலமைப்பானது அமைச்சர்களை பலப்படுத்துவதாக இல்லாமல் மக்களை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். தற்போதைய நிலைமையிலேயே இவர்களுக்கு போதுமான அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அதனைவிடுத்து இருக்கின்ற அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் எமது ஜனநாயக தேசிய கூட்டணியானது இந்த 18 ஆவது திருத்தங்களை கடுமையாக எதிர்க்கின்றது. நாங்கள் அதற்கு எதிராகவே வாக்களிக்கின்றோம். எமது கட்சியில் உள்ள ஏழு பேரும் இதற்கு எதிராக செயற்படுவோம். இன்று எதிர்த்தரப்பில் இருக்கின்ற கட்சிகள் பலமாக இருப்பதாக தெரியவில்லை. சிலர் தனிப்பட்ட நலன்களுக்காக அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவார்களா என்பதில் சந்தேகமே நிலவுகின்றது.
நாங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கினோம். அதில் தொடர்ந்து இருக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எனினும் அதனை சார்ந்த வாக்குறுதியை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் அதற்கு மாற்று வகையில் செயற்படுகின்றனர்.
அதாவது தற்போதைய நிலைமையில் சர்வாதிகாரத்துக்கு தேவையான விடயங்களை நோக்கி நகர்வதாகவே நாங்கள் உணர்கின்றோம். இது தொடர்பில் உலகில் நாங்கள் பல உதாரணங்களை பார்த்துள்ளோம். தற்காலிகமாக கிடைக்கின்ற அதிகாரங்களை நீடிக்க முயற்சித்து அதில் குறுகிய காலத்தில் தோல்வியடைந்த வரலாறுகள் உலகில் உள்ளன. எனவே இந்த நீடிப்பு யற்சியானது நீண்டகாலத் துக்கு நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாகும்.
இன்றைய நிலைமையில் பாராளுமன்றத்துக்கு வருகின்ற மார்க்கங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஒரு கையில் ஜனாதிபதியின் படத்தை வைத்துக்கொண்டு மறு கையினால் எனக்கு சைகை செய்கின்றனர். அவர்களின் கங்களில் கவலைகள் தெரிந்தன.
பாராளுமன்றத்தில் நாங்கள் இந்த திருத்தத்தை எதிர்க்கின்ற அதேநேரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த அரசாங்கத்துக்கு சரியான மக்கள் வரம் கிடைக்கவில்லை. ஒரு கோடியே 40 இலட்சம் வாக்காளர்களில் 47 இலட்சம் மக்களே அரசாங்கத்துக்கு தேர்தலில் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அந்த வகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களே அரசாங்கத்துக்கு கடந்த தேர்தலில் வாக்களித்தனர்.
கேள்வி: உங்கள் கூட்டணியில் ஏழு உறுப்பினர்களே இருக்கின்றனர். ஆர்ப்பாட்டங்களை தவிர என்ன செய்வீர்கள்?
பதில்: எமது ஜனநாயக தேசிய கூட்டணியில் ஏழு உறுப்பினர்கள் தான் இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் மிகவும் பலமான முறையில் செயற்படுகின்றோம். மிகப் பெரிய எதிர்க்கட்சியைவிட சிறப்பாக குரல் எழுப்பி வருகின்றோம். அதனால்தான் மக்கள் எம்மில் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எமது பலத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம்.
கேள்வி: ஐக்கிய தேசிய கட்சி இன்று (நேற்று ) பாராளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்களா?
பதில்: எனது கருத்தின்படி பாராளுமன்றத்துக்கு சமுகம் அளித்து இந்த திருத்தத்தை எதிர்த்து பேசியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை. அதனால் அரசாங்கத்துக்கு இலகுவாகிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியானது 23 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது. எனவே மக்களின் சார்பாக இங்கே வந்து அவர்கள் உரையாற்றியிருக்கவேண்டும்.
கேள்வி: குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்?
பதில்: இதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் குறைந்த எம்.பி. க்கள் இருந்த வரலாறு உள்ளது. எதிர்க்கட்சி பலவீனமாக இருந்தாலும் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களில் மாற்றம் இல்லை. அதாவது வாக்காளர்களில் மூன்றிலிரண்டு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. எனவே எம்மால் எதிர்த்து செயற்பட முடியும். உடனடியாக முடியாவிட்டாலும் எம்மால் பலமாக நீண்டகாலத்தில் செயற்பட முடியும். மக்கள் எம்டன் இருக்கும் வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது.
எனினும் அரசியலமைப்பின் ஊடாக மக்களையும் எதிர்க்கட்சியினரையும் மிதிக்க முயற்சித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கான உதாரணங்களை உலகில் நாங்கள் பார்த்துள்ளோம். மக்கள் புரட்சிகளுக்கும் இராணுவ புரட்சிகளுக்கும் வழி வகுக்கலாம். ஆனால் அவ்வாறு நடைபெற வேண்டாம் என்று பிரார்த்திக்கின்றோம்.
கேள்வி: ஜனநாயக தேசிய கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுமா?
பதில்: அவர்கள் இணைந்து செயற்பட முன்வந்தால் பார்க்கலாம். முதலில் அவர்களின் கட்சி உட்பூசலை தீர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டுப் பிரச்சினைகளைவிட ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகள் அதிகமாகும். எனவே அவற்றை தீர்த்துக்கொண்டு வந்தால் பார்க்கலாம்.
கேள்வி: இராணுவ நீதிமன்ற நிலைமைகள் எவ்வாறு உள்ளன?
பதில்: அதனை இராணுவ நீதிமன்றம் என்று கூற நான் விரும்பவில்லை. அது காட்டு நீதிமன்றமாகும். காட்டு நீதிமன்றத்தில் விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து தெரியும் தானே? அடுத்த கட்டத்தில் நான் சிறையிலடைக்கப்படலாம். எந்த சட்டத்தரணி எவ்வாறு வாதாடினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
காரணம் தீர்ப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. மேன்றையீடு செய்தாலும் ஒன்றும் நடக்காது. அங்கு நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. நான்கு மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ளவர்கள் நான்கு நட்சத்திர ஜெனரல் ஒருவரின் பதவிகளை பறிப்பது உலகில் எங்கும் நடந்திருக்காது.நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு ஒன்றும் நடக்காது என்று பலரிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொள்ள மாட்டேன்.